×

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய தலைவர்கள்: தமிழக அரசியலில் திருப்பம்

சென்னை:தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்தி யூனியன் முஸ்லிம் கட்சி தலா 1 இடங்களிலும் போட்டியிட்டன. அதே நேரத்தில் அதிமுக 20 இடங்களிலும், பாமக 7, பாஜ 5, தேமுதிக 4, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்ஆர் காங்கிரஸ் தலா 1 இடங்களிலும் போட்டியிட்டன. இதில், தமிழக பாஜ தலைவர் தமிழிசை தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். அதிமுகவில் முக்கிய தலைகளான தம்பிதுரை கரூரிலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி, திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியன், திருப்பூரில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் போட்டியிட்டனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தர்மபுரியில், ஏ.கே.மூர்த்தி அரக்கோணத்திலும், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேனியிலும், அமமுகவில் முக்கிய தலைகளான தங்கதமிழ்ச்செல்வன் தேனியிலும், தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா போட்டியிட்டனர். இந்த முக்கிய தலைகள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதிலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

அவர் வெற்றி பெற்றால் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்பது உறுதி என்ற நிலையில் அவரது தொகுதியையும், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். இதனால், அவர்கள் 5 பேர் போட்டியிடும் தொகுதியில் ஒட்டு மொத்த தமிழகமும் அந்த தொகுதியை உன்னிப்பாக கவனித்து வந்தது. அதேபோன்று அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் திருப்பூர் ஆனந்தன், அமமுகவில் தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்களால் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும், இரண்டாவது முறையாக எம்பி பதவிக்கு போட்டியிட்ட அன்புமணி வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் அவர் பின்னடைவை சந்தித்தார். அவர், மற்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யாமல் தர்மபுரி தொகுதியை சுற்றி, சுற்றியே வந்தார். இருப்பினும் அவருக்கு எதிராக மக்கள் மனநிலை இருந்ததால் அவரும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாமக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடும் பின்னடைவை சந்தித்து தோல்வியை தழுவி இருப்பது தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி மற்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யாமல் தர்மபுரி தொகுதியை சுற்றி, சுற்றியே வந்தார். இருப்பினும் அவரும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



Tags : election ,leaders ,Tamil , Competing,parliamentary, elections,Tamil politics
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்