×

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி சரித்திர வெற்றி

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 4,31,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கேரள தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடைசி வரை இந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது.

கடைசி நேரத்தில் தான் அமேதி தொகுதியுடன் வயநாட்டிலும் போட்டியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து கேரள தேர்தல்களம் பரபரப்பானது. ராகுல்காந்தி போட்டியிடுவதால் கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தற்போதும் 20ல் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி கேரளாவில் இதுவரை எந்த வேட்பாளரும் பெறாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த முஸ்லிம் லீக் வேட்பாளர் இ.அகமது தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சைனபாவை 1,94,739 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதுவரை இதுதான் கேரளாவில் சாதனையாக இருந்தது. இந்நிலையில் ராகுல்காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூ. வேட்பாளர் சுனீரை 4,31,542 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ராகுல்காந்தி மொத்தம் 7,05,999 வாக்குகளும் சுனீர் 2,74,457 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


Tags : Rahul Gandhi ,constituency ,Wayanad , Wayanad constituency, Rahul Gandhi, history, success
× RELATED நீலகிரியில் ராகுல் காந்தி வந்த...