×

அதிமுகவின் சதிவலையை தடுக்க தேர்தல் கமிஷனில் புகார் சிறப்பான வெற்றியை தேடி தந்த அத்தனை பேருக்கும் நன்றி: தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிறப்பான வெற்றியை தேடி தந்த அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் சிலைக்கு அடியில் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் இன்று முடிவுகள் வெளிவந்திருக்கிறது. ஆகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றியை உரிமையாக்கி கொண்டிருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சிறப்பான வெற்றியை தேடி தந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிற கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்மோடு தோழமை கொண்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து கொண்டு, எங்கள் வெற்றிக்கு அரும்பாடுபட்டிருக்கக்கூடிய நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.அதேபோல் நமது கூட்டணியின் தொடர்புகளை, எண்ணங்களை மக்களிடம் எடுத்து சென்ற ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இந்த வெற்றியை பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், நாம் களத்தில் இறங்குவதற்கு முன்பே ஒரு உறுதியை எடுத்துக் கொண்டோம். என்ன உறுதி என்று சொன்னால் கலைஞர் இல்லாமல் நடைபெறுகிற தேர்தல் இந்த தேர்தல்.எனவே எப்படி இந்த களத்தில் இறங்கப் போகிறோம். எப்படி இந்த தேர்தலை சந்திக்கப் போகிறோம். கலைஞர் இருந்திருந்தால் என்னென்ன பயிற்சியை, என்னென்ன தேர்தல் பணிகளை நமக்கு கற்று தந்திருப்பாரே. இவைகளை நாம் ஏற்கனவே அவரிடம் கற்ற காரணத்தால் அவர் வழியில் நாம் பாடுபட்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல இந்த வெற்றியை அவரது நினைவிடத்துக்கு சென்று நாம் வெற்றி மாலையை சமர்ப்பிப்போம் என்ற உறுதியை எடுத்திருந்தோம்.ஆக அந்த உறுதியை நிறைவேற்றக்கூடிய நிலையை ஏற்படுத்தி தந்திருக்கிற உங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை ஐந்தாறு தொகுதிகளில் வாக்கு வித்தியாசத்தை பொறுத்தவரை இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதி ஏதேனும் அதிலே சூழ்ச்சியை செய்யலாமா? சதிவலை பின்னலாமா? என்று திட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள். அதை அறிந்து அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்று நமது தலைமை கழகத்தின் சார்பில் கட்சியின் முன்னணியினர் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷனில் நேரடியாக சென்று புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். நிச்சயமாக அது நடக்காது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு உங்களை எல்லாம் சந்திக்கலாம் என்றிருந்தேன். நேரம் ஆகும் என்ற சூழ்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை போய் கொண்டிருக்கிறது. நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். கலைஞர் இருந்து இதை பார்க்கவில்லையே என்ற கவலை தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றிருக்கக்கூடிய திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.



Tags : victory ,Election Commission ,speech ,volunteers ,MK Stalin ,AIADMK , Election Commission ,AIADMK,MK Stalin
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...