×

தவறான சிகிச்சையால் அரசு ஊழியர் பலி? காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

அண்ணாநகர்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே ஊழியர் திடீரென இறந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  சென்னை ஐசிஎப், கிழக்கு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (34), ரயில்வே ஊழியரான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால், உறவினர்கள் இவரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி சேர்த்தனர். அங்கு, கடந்த 19 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சிவக்குமாருக்கு மருத்துவர்கள் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து, ஒரு ஊசியை போட்டுள்ளனர். இதனால், அவருக்கு சிறிது நேரத்திலேயே கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

தகவலறிந்த சிவக்குமாரின் உறவினர்கள், சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அண்ணாநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் சிவக்குமார் இறந்ததாகவும், எனவே சம்மந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் வழக்கு பதியாததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சிவக்குமாரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார்  உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Government employee ,treatment Siege ,relatives ,police station , Wrong treatment, civil servant, kills, siege of relatives
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...