அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்களால் விபத்து அபாயம்

அம்பத்தூர்: அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பாதசாரிகள்  சென்று வருகின்றனர். இந்த மேம்பாலம் அருகே தாலுகா அலுவலகம், தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம், ரயில் நிலையம், தனியார் சைக்கிள் தொழிற்சாலை, தனியார் பள்ளிகள் ஆகியவை உள்ளன. மேற்கண்ட இடங்களுக்கு பொதுமக்கள் ரயில்வே மேம்பாலத்தை கடந்து தான் செல்ல முடியும். இந்த மேம்பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் மின்சார வயர்கள் திறந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் அதிகரித்து வருகிறது.

காலை, மாலை நேரங்களில் அதிகளவில் மாணவர்கள் இவ்வழியே சாலையில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், உயர் அழுத்த மின் வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் மோதினால், பெருமளவில் விபத்து அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் பாதசாரிகள் செல்ல இடையூறாக இருக்கும் வயர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: