×

இது என்னுடைய வெற்றி அல்ல... விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களின் வெற்றி; பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு மலர்களை தூவி பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பாஜக பெற்றுள்ள இந்த வெற்றி நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமராக முதல் பயணத்திலேயே பல தடைகளை கடந்தேன் என்றும், இது எனது 2-வது பயணம் என்றும், இதிலும் நான் தளர்ச்சியடைய மாட்டேன் என்றும் மோடி தெரிவித்தார்.

நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றி மக்களின் பாதங்களில் சமர்பிக்கிறோம் என்றும், இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளதாகவும், நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று மோடி தெரிவித்தார். ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். வென்றவர்கள் அனைவரும் தோளோடு தோள் நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இது மோடியின் வெற்றியல்ல என்றும், வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களின் வெற்றி என்றும், வறுமை ஒழிப்பே இந்த அரசின் பிரதான கொள்கை அதை நோக்கியே எங்கள் பயணம் தொடரும் என்று மோடி தெரிவித்தார். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டை மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் கனவு என்றும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டை உயர்த்த முடியும் என்று மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும், பாஜகவிற்கு கிடைத்தது சர்வதேச அளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பிறகு அதிக பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எங்களுடையது என்று பெருமையுடன் தெரிவித்த மோடி, மோசமான வானிலை நிலவிய போதும், அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பின் மூலம் சாதி, வாரிசு அரசியல் புதைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


Tags : peasant , Prime Minister Modi, Parliamentary Elections 2019, Lok Sabha Election, BJP Office, BJP Volunteers, Amit Shah
× RELATED பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி...