திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வெற்றிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் இல்லாமல் நடைபெற்ற முதல் தேர்தலில் அவர் வழியில் பணியாற்றி வெற்றி பெற்றுள்ளோம் என்று தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் உரையாற்றினார். திமுக வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கும், வெற்றி பெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திமுகவின் வெற்றியை பார்க்க கலைஞர் இல்லையே என்ற வருத்தம் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வெற்றிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் என்றும், தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி ஆட்சியை நடத்துவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 345 இடங்களிலும், காங்கிரஸ் 92 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 38 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வெற்றிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: