×

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை!

கொல்கத்தா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 80 முதல் 82 விழுக்காடு வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. பிரச்சாரத்தின் போதும், வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்கத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், தற்போதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பா.ஜ.க, பர்தான்-துர்காபூர், ஆலிபூர் டூவர்ஸ், அசன்சோல், போங்கான், பிஷ்ணுபுர், காடல் உள்ளிட்ட 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலமாக இருந்த மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெற முடியாத நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வலுவான கட்சியாக இருந்து வருகிறது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை கடந்தமுறை நாடு முழுவதும் மோடி அலை வீசிய நிலையில், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. எனவே, இம்முறை பா.ஜ.க கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்றும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்படி கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Lok Sabha ,Trinamool Congress ,West Bengal , Lok Sabha polls, vote count, West Bengal, Trinamool Congress, BJP
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...