×

மத்தியில் அரியணை ஏறப்போவது யார்?....... நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது.  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலின்போது நடந்தது.

தபால் ஓட்டுகள்

மக்களவைக்கு நடந்த 7 கட்ட வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 90.99 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் விவிபேட் ஒப்புகை சீட்டு இயந்திரம் முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

முடிவு வெளியாவதில் தாமதமாகும்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதால், இவற்றில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை நூறு சதவீதம் ஒப்பிட்டு பார்த்து எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டன. இதனால், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு கடைசியாக எண்ணி, ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது. இதன் காரணமாக, இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் வழக்கமான நேரத்தை காட்டிலும் 5-6 மணி நேரம் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம்

இருப்பினும், காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மத்தியில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற முன்னணி நிலவரம் தெரிய வரும். பொதுவாக மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் தினத்தன்று மாலையிலேயே தெரிந்து விடும். இம்முறை இரவு 10 மணிக்கு பிறகே இறுதி முடிவை கூற முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3 அடுக்கு பாதுகாப்பு

இம்முறை வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் கட்சி பிரதிநிதிகள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்கள் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

முகவர்களுக்கு கட்டுப்பாடு

ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் முகவர்கள் பென்சில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து முகவர் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேறி விட்டால் அவர் மீண்டும் அனுமதிக்கப்படமாட்டார்.

பட்டாசு வெடிக்க தடை

வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கொடி கட்ட தடை

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சியினர் கட்சிக்கொடி கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Lok Sabha election, by-elections, counting,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...