நெல்லையில் போக்குவரத்து மாற்றம் நிறுத்தங்களில் நிற்காமல் பறக்கும் அரசு பஸ்கள் : கேரளா செல்லும் பயணிகள் கடும் அவதி

நெல்லை: நெல்லையில் இருந்து ஆலப்புழா, கொல்லம் செல்லும் அரசு பஸ்கள், குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நெல்லை டவுன் காட்சி மண்டபம்- அருணகிரி தியேட்டர் இடையே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆலங்குளம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை செல்லும் பஸ்கள், வண்ணார்பேட்டை பைபாஸ் ரோடு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி சாலை வழியாக பழையபேட்டை சாலையில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. இதனால் நெல்லை டவுன், சந்திப்பு பகுதி மக்கள், தென்காசி மார்க்கமாக செல்ல வேண்டுமென்றால் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் அல்லது பழையபேட்டை சென்றுதான் பஸ்சில் ஏற வேண்டும். இதேபோல் நெல்லையில் இருந்து கேரள மாநிலம் புனலூர், ஆலப்புழா, கொல்லம் ேபான்ற நகரங்களுக்கு தமிழகம் மற்றும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள், சில நேரங்களில் வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து விடுகின்றன.

இதனால் கேரள மார்க்கமாக செல்லும் பயணிகள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்தும் ஏமாற்றமடைகின்றனர். எனவே கேரள மார்க்கமாக செல்லும் பஸ்கள், வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் பஸ்நிறுத்தம் அருகில் நின்று செல்ல போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல் சந்திப்பு பகுதி மக்கள், தென்காசி, செங்கோட்டை, செங்கோட்டை செல்ல வசதியாக சந்திப்பு ராம்தியேட்டர் பைபாஸ் சாலை பகுதியில் கூடுதல் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிரைவர் அலட்சியம்

நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலக பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பயணிகள், ஆலப்புழா உள்ளிட்ட கேரளா பகுதிகளுக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தனர். குறிப்பிட்ட பஸ் வந்தபோது, பயணிகள் சைகை மூலம் பஸ்சை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் மற்றும் நடத்துனர் அலட்சியத்துடன் பஸ்சை நிறுத்தாமல் சென்றனர். கேரள பகுதிகளுக்கு நெல்லையில் இருந்து பல மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பஸ்வசதி உள்ளன. ஆனால் டிரைவர் அலட்சிய போக்கால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே கேரள பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்ற அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: