முதுகுளத்தூர், கடலாடி,பரமக்குடி பகுதியில் வரத்து கால்வாய்களை பாழ்படுத்தும் கருவேல மரங்கள்

* சிறு ஓடையான  ஆறுகள்

* மதகுகள்  முற்றிலும் சேதம்

சாயல்குடி: முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி பகுதியில் வரத்து கால்வாய்களை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. மழை காலம் துவங்கும் முன்பு அதிகாரிகள் அகற்ற முன்வரவேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நடைபெறும் முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் முதுகுளத்தூர் ரெகுநாத காவிரி, கடலாடி மலட்டாறு, சாயல்குடி சங்கரதேவன் கால்வாய், கூத்தன் கால்வாய், கஞ்சம்பட்டி ஓடை போன்றவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இதில் ஓடி வரும் தண்ணீரை கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் சேமித்து வைத்து, இப்பகுதியிலுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இந்த நீர் வழித்தடங்கள், நீராதாரங்கள் பல வருடங்களாக முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பதால், தற்போது சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்தது. மேலும் ஆற்று பகுதியில் தனியார்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்தல், தொடர்ந்து நடந்து வரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தற்போது ஆறு, கால்வாய்கள்இருக்கும் தடம் தெரியாமல்சிறு ஓடைகளாக மாறி வருகிறது.

ஆறுகளிலிருந்து பிரிந்து கண்மாய்களுக்கு செல்லும் கிளை கால்வாய்களும், கண்மாய்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள மடைகள், மதகுகள், சிறு பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது.இதுபோன்ற காரணங்களால் மழை காலங்களில், காட்டாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட, முறையான வழித்தடங்களின்றி, கண்மாய், குளங்கள் பெருகுவது கிடையாது. அவற்றை சேமித்து வைப்பதற்கும் ஆறுகளில் தடுப்பணைகள் இல்லாததால் மழை தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயம் நாளுக்குநாள் அழிவை நோக்கி செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்,எனவே வரும் காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கு சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நீர்நிலைகளை சீரமைத்து மராமத்து செய்யவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பரமக்குடி வைகை ஆற்றில் தெளிச்சத்தநல்லூர் பகுதியில் வலது, இடது பாசன கால்வாய்கள் பிரிந்து செல்கிறது. வைகை ஆற்றின் இடது பகுதியில் பிரிந்து செல்லும் கால்வாய் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்கு பிரிந்து செல்கிறது. வலதுபுற கால்வாய் பரமக்குடி ஒட்டியுள்ள உரப்புளி, காமன்கோட்டை, மஞ்சக்கொல்லை, கருந்தனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய பாசனத்திற்கு செல்கிறது. வலது கால்வாயிலிருந்து கூத்தன்கால்வாய் பிரிக்கப்பட்டு வெங்காளூர், புதுக்குடி, ஊரக்குடி, தோளூர், பாம்பூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடைமடை கால்வாயாக உள்ளது. இந்நிலையில் ஆண்டு தோறும் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கும் பொது சூடியூர் அணைக்கட்டில் மட்டும் பெயரளவில் கருவேல மரங்களை வெட்டி விட்டு மற்ற கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பரமக்குடி பொன்னையாபுரம் வழியாக பாசன கால்வாய் சாக்கடை நிரம்பி  செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கும் கால்வாயை தூர்வாரப்பட்டு மழை காலங்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: