திண்டுக்கல்லில் ‘கொட்டும்’ குடிநீர் வருமானத்தால் கேள்விக்குறியாகும் வருங்காலம்

* கிராமங்களில் கணக்கின்றி உறிஞ்சுகின்றனர்

* தடுக்க முன்வருமா மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல்: இந்தாண்டு லோக்சபா தேர்தலால் தமிழகத்தில் மக்கள் தாகத்தை சரி செய்ய திட்டங்கள் தீட்டப்படவில்லை. வறட்சியை இலக்காக கொண்டு ஏற்கனவே கொண்டு வரப்பட்ட திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் எந்தாண்டும் இல்லாத நிலையில் குடிநீர் பிரச்னை அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. திண்டுக்கல்லில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டிலும் மறியல், மனுக்கொடுத்தல் என மக்கள் சாரை, சாரையாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லின் சராசரி மழையளவு 836மி.மீ.,தான். இது கடந்த 10 ஆண்டுகளாக எட்டவில்லை. இதனால் 2, 456 கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் காய்ந்து கிடக்கிறது.குடிநீர் விற்பனை ஜோர்திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 90 ஆயிரம் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதை பயன்படுத்தி திண்டுக்கல்லில் குடிநீர் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன் பிரதானமாக உள்ளது. ஒரு கேன் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. உப்பு தண்ணீர் ஒரு மினி டேங்கர் ஆயிரம் லிட்டர் ரூ.200 முதல் ரூ.300க்கு விற்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள தனியார் ஆழ்துளை கிணற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் லாரி, வேன், ஆட்டோ டேங்கரில் நிரப்பப்பட்டு, குடம் ரூ.10க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் தண்ணீர் விற்பனையில் இறங்கியுள்ளனர். இதன்மூலம் இலவச மின்சாரம் தண்ணீர் வியாபாரத்திற்கு பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பல லட்சம் ரூபாய் ஈட்டுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 600 மி.மீ., என இருந்தாலும் அதிலும் பாதிதான் பெய்கிறது. கோடை ஒருபுறம், வறண்ட நீர் ஆதாரம் மறுபுறம் என வாட்டி வதைப்பதால் நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. கிராமங்களில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு நகரப்பகுதியில் விலைக்கு விற்கப்படுகிறது. பணம் கொடுத்தால் எதுவும் சாத்தியம் என்ற மனப்பான்மை மக்களிடம் வளர்ந்து விட்டது. அதனால் யாரும் தண்ணீர் சிக்கனத்தை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. இதனால் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பல நகரங்களில் நிலத்தடிநீர் இல்லாத நிலை ஏற்படும். அதில் திண்டுக்கல்லும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. வருமானத்திற்காக நிலத்தடிநீர் ஆதாரம் அளவு கடந்து உறிஞ்சப்படுவது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையை உண்டாக்கும். மழை பெய்யும்போது கழிவுநீரில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கலக்கிறது. இதை தடுத்து வீடுகளில் மழை நீர் சேமிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனால் நிலத்தடிநீர் மட்டம் உயரும் என்பது மட்டுமல்லாமல், கோடை காலத்தில் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட நிர்வாகம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: