பஸ்ஸ்டாண்டு நுழைவு வாயிலில் மண் குவியலால் தொடரும் விபத்து: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மானாமதுரை: மானாமதுரை பஸ்ஸ்டாண்டு முன் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையின் போது எடுக்கப்பட்ட மண்குவியல்களை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியம் காட்டுவதால் அப்பகுதியில் தினமும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். மதுரை ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் உள்ளது மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டு. இங்கு ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட நான்கு மார்க்கங்களில் இருந்தும் தினமும் 400க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்களில் செல்வதற்கும், வந்து இறங்குவதற்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் தெற்குபகுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும். நான்குவழிச்சாலை பணிகள் துவங்கியபோது பஸ்ஸ்டாண்டு நுழைவுவாயில் பள்ளமாக இருந்தது. இதை மண்கொண்டு நிரப்பிய நான்குவழிச்சாலை ஒப்பந்த நிறுவனம் சர்வீஸ்ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தது. இதனால் கான்கிரீட் ரோடாக இருந்த நுழைவுவாயில் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த பள்ளங்களில் அதிகளவு பேருந்து போக்குவரத்து ஏற்பட்டதால் மழையாலும், தண்ணீர் தேங்கியதாலும் இப்பகுதி மண்குவியலால் மேடு பள்ளமாக மாறியது.

இரவு நேரங்களில் நுழைவு வாயில் அருகே தெருவிளக்கு இல்லாததாலும் அடிக்கடி இங்கு டூவீலர்களில் வருவோர் தடுமாறி விழுகின்றனர். இதனை சரிசெய்து தரவேண்டிய நெடுஞ்சாலை ஒப்பந்தபணி நிறுவனம், நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் கண்டுகொள்ளாத நிலையில் தினமும் பஸ்ஸ்ஸ்டாண்டிற்குள் பயணிகளை ஏற்றி செல்ல, இறக்கிவிட வரும் இருசக்கர வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் போதுராஜா கூறுகையில், இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பழனிவேலு என்பவர் விழுந்து தலையில் அடிபட்டதால் ரத்தம்கசிவு ஏற்பட்டு இறந்துபோனார். ஒரு ஆண்டாகியும் இதனை சரிசெய்து தர நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட கலெக்டர் இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: