×

கருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு

சென்னை: விஜயவாடாவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: சென்னை வளசரவாக்கம் தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அறக்கட்டளை வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை என்பதால் வங்கிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே அந்த கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, 2019-20ம் கல்வியாண்டில் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன் 2019-20ம் கல்வி ஆண்டில் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க இடைக்கால தடை விதித்தும், அக்கல்லூரிகளுக்கான இணைப்பை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அறக்கட்டளை சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : Judge ,Karumariamman Engineering College ,High Court: High Courts Division Bench , Admission Opinion ,Karumariamman, High Court Division ,Bench, order
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...