கோயில் செயல் அலுவலரை தாக்கிய வழக்கில் கூலிப்படை கும்பல் 4 பேர் கைது

புழல்: பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் செயல் அலுவலராக சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி தனது உதவியாளர் தனஞ்செழியனுடன் பைக்கில் சென்றபோது, ஒரு கும்பல் சீனிவாசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தனஞ்செழியனுக்கும் வெட்டு விழுந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், கோயிலில் எழுத்தராக பணிபுரியும் வெங்கடேசன் என்பவரே செயல் அலுவலர் தாக்குதலுக்கு முக்கிய புள்ளி என தெரியவந்தது. இதையடுத்து, செயல் அலுவலரை தாக்கியதாக தனசேகர், தனஞ்செழியன், கிருபாகரன், சதீஷ், தினேஷ்குமார், வெங்கடேசன் ஆகிய 6 பேரை கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

விசாரணையில் கோயிலில் அர்ச்சனை, அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு போலி டிக்கெட் அச்சடித்து இக்கும்பல் ஊழல் மோசடியில் ஈடுபடுவதை செயல் அலுவலர் சீனிவாசன் தட்டி கேட்டதால் அவரை கொலை செய்ய முயன்றதாகவும், இதற்கு அவரது உதவியாளர் தனஞ்செழியனே முக்கிய புள்ளியாக செயல்பட்டதும் தெரியவந்தது.இந்நிலையில் செயல் அலுவலர் தாக்குதலில் கூலிப்படையாக செயல்பட்ட சோழவரம், கம்மவார்பாளையத்தை சேர்ந்த சிம்பு (20), கோகுல் (20), வடகரை, கோமதியம்மன் நகரை சேர்ந்த வினோத் (21), பர்மா நகர் ரமேஷ் (32) ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: