ஆவடியில் நிலம் வாங்கி தருவதாக கூறி வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவர் கைது

அம்பத்தூர்: ஆவடி அருகே நிலம் வாங்கி தருவதாக கூறி வங்கி அதிகாரியிடம் ₹10 லட்சம் மோசடி செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சாலிகிராமம், காந்தி நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி மோகன். இவரது மனைவி ராஜலட்சுமி (44).  ஈக்காட்டுதாங்கலில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டு கீழ்த்தளத்தில் வாடகைக்கு வசிப்பவர் சுமதி (32). இவர், கடந்த 5 ஆண்டுகளாக ராஜலட்சுமிக்கு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சுமதி, ‘‘திருவல்லிக்கேணியை சேர்ந்த என்னுடைய நண்பர் சீனிவாசன் (44) என்பவருக்கு சொந்தமாக ஆவடி, கோயில்பதாகையில் இடம் உள்ளது. அதை வாங்குவதற்கு நீங்கள் ₹10 லட்சம் கொடுத்தால் மீதி பணத்தை வாடகையில் கழித்துக்கொண்டு அந்த இடத்தை உங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து தருகிறோம்’’ என ராஜலட்சுமியிடம் கூறி உள்ளார்.

இதை நம்பிய ராஜலட்சுமி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ₹10 லட்சத்தை சீனிவாசன், சுமதி ஆகியோரிடம்  கொடுத்துள்ளார். பின்னர் ராஜலட்சுமி பத்திரப்பதிவு செய்வதற்காக  அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வில்லங்க சான்று பார்த்தபோது, அந்த இடம் வேறொரு நபரின் பெயரில் பதிவாகி இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் செய்தார். பின்னர் அவர் புகார் மனுவை அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணனிடம் அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் நிலம் வாங்கி தருவதாக ராஜலட்சுமியிடம் சுமதி மற்றும் சீனிவாசன் ஆகியோர் ₹10 லட்சம் பணம் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதி, சீனிவாசன் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: