காசிமேடு மீனவர் கொலை வழக்கு மனைவியை அவதூறாக பேசியதால் கொன்றோம்: சரணடைந்த 2 பேர் வாக்குமூலம்

பெரம்பூர்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் கடந்த 10ம் தேதி மீனவர் சடலம் கரையில் ஒதுங்கி கிடந்தது.  அங்கிருந்த மீனவர்களும், பொதுமக்களும் அவரது சடலத்தை கைப்பற்றி பார்த்தபோது கழுத்தில் மீன் வலையால் இறுக்கி கொலை செய்ததற்கான  அடையாளங்கள் இருந்தன. இதுகுறித்து  காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு  அனுப்பினர். பின்னர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  விசாரணையில் இறந்து கிடந்தவர்  காசிமேடு பவர் குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் ஜான்சன்  என தெரியவந்தது. எனவே ஜான்சனின் நண்பர்களான புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ராஜேஷ் (32),  தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின்பேரில் ராயபுரம் உதவி ஆணையர் தினகரன்  விசாரித்து வந்தார். இந்நிலையில் திடீரென தலைமறைவான இருவரும் கடந்த 17ம் தேதி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து சரவணன், ராஜேஷ் ஆகிய இருவரையும் இராயபுரம்  உதவி ஆணையர் தினகரன் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  விசாரணையில் தெரிய வந்ததாவது: சரவணன், ராஜேஷ், ஜான்சன் ஆகிய 3 பேரும் ஒன்றாக படகில் சென்று  மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.  படகு உரிமையாளர் வீட்டு விசேஷத்தில் அனைவரும் மது ஒன்றாக அருந்தியபோது ராஜேஷ், சரவணன் ஆகியோரின் மனைவிகளை பற்றி தகாத வார்த்தைகளால் ஜான்சன் பேசியுள்ளார். இதனால்  ஜான்சன் மீது  இருவருக்கும்   ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் மது போதையில் தகராறு அதிகமாகவே இருவரும் ஜான்சனை கட்டையால் அடித்து  கழுத்தில் கயிற்றை கட்டி கடலில் தூக்கி வீசியுள்ளனர். இவ்வாறு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: