தேர்தல் முடிவுகள் வெளியானதும் குமாரசாமி முதல்வர் பதவியை இழப்பார்: மத்திய அமைச்சர் சதானந்தகவுடா பேட்டி

பெங்களூரு: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் கர்நாடக முதல்வர்  குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியநிலை ஏற்படும் என  மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில், பாஜ 23  இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். இதை தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் இடையேயான  கூட்டணியில் முறிவு ஏற்படும். காங்கிரசார் மஜதவுக்கு அளித்து வரும் ஆதரவை   நாளை திரும்பப் பெறுவார்கள்.  இதன் பின்னர், அதே நாளில்  முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு  செல்வது உறுதி. எனவே பாஜ ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முதல்வர் குமாரசாமி ஆகிய இருவரும் ஒரே  மனநிலையை கொண்டவர்கள். மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோற்பது  எவ்வளவு உறுதியோ அதேபோல கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத  கூட்டணி  வேட்பாளர்கள் பெரும் அளவில் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது.

இருவரும்  அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி பணிகளை செய்வதில் அதிக அக்கறை கொள்ளாமல்  எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் மட்டுமே கவனமாக இருந்து வருகின்றனர்.  இதனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் கட்சி  வேட்பாளர்கள் இரு தேர்தலிலும் தோல்வி அடைவது உறுதி. அங்கு  ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தான் வெற்றிபெறும் என்பதில்   சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பீதியில் இருக்கும்  சந்திரபாபு நாயுடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழியை போட  தொடங்கியுள்ளார்.கர்நாடகாவை பொறுத்த வரை மஜத ஒரு தொகுதியில் வெற்றி  பெற்றால் அது அதிகம்தான். சமீபத்தில் வெளியான தேர்தல் கருத்துக்  கணிப்பில் பெருவாரியான தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: