ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா சந்திரபாபு நாயுடு

திருமலை: ஆந்திராவில் தேர்தல் முடிந்து 50 நாட்களுக்கு பிறகு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆட்சியை பிடிப்பது யார்? என்ற கேள்விக்கு இன்று பதில் தெரிந்துவிடும்.ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 3 கோடியே 93 லட்சத்து 45 ஆயிரத்து 717 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 94 லட்சத்து 62 ஆயிரத்து 339 வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 98 லட்சத்து 79 ஆயிரத்து  241 வாக்காளர்களும், 3957 திருநங்கைகளும் உள்ளனர்.இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11ம் தேதி  முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 3 கோடியே 13 லட்சத்து 33 ஆயிரத்து 631 வாக்காளர்கள்  தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் 79.64 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்காளர்கள் யாருக்கு தீர்ப்பு வழங்கி மகுடம் சூட்டினார்கள் என்ற முடிவுக்காக கடந்த 50 நாட்களாக காத்திருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை  தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டங்களில் 55 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் திரிவேதி மேற்பார்வையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், இணை கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,  தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடக் கூடிய தேர்தல் அதிகாரிகள் அந்தந்த வாக்கு மையத்திற்கு வர உள்ளனர். முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 7.30  மணி பிரிக்கப்பட்டு 8 மணி முதல்  தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதையடுத்து   வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. மதியம் 2 மணிக்கு எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலவரம் தெரிய வர உள்ளது.

Related Stories: