×

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் சுமந்து செல்லும் கழுதைகள்

நாசிக்: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம், கழுதைகள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று சப்ளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. வனப்பகுதிகளில்  வசிக்கும் ஆதிவாசிகளின் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் ஆதிவாசி மக்கள் பல கிமீ தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியிருக்கிறது. இதன் காரணமாக பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிலைமையை சமாளிக்க நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள  வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு கழுதைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.அங்குள்ள சாத்புரா மலைப்பகுதியில் உள்ள கோலிடாம்பர் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லை. இவற்றுக்கு டேங்கர்களில் தண்ணீர் கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால், தண்ணீர் நிரப்பப்பட்ட கேன்கள் கழுதைகள் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டு இப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பாலாஜி கூறுகையில், ‘‘வனப்பகுதியில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டுவிட்டதால் கழுதைகள் மூலம் தினமும் ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்று சப்ளை  செய்கிறோம். இதற்காக இரண்டு முறை கழுதைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பருவமழை தொடங்கும் வரை இப்பணி தொடரும்’’ என்றார். முதல் முறையாக இப்பகுதியில் கழுதைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் உள்ளூர் தாசில்தார் பங்கஜை நேரில் அனுப்பி ஆய்வு செய்தார்.  இதில் அங்குள்ள 4 கிணறுகளில் 3 கிணறு வறண்டுவிட்டது தெரியவந்தது. எஞ்சியுள்ள ஒரு கிணற்றிலும் மிகவும் சொற்ப அளவே தண்ணீர் இருந்தது. இதனால் பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். இதையடுத்து எப்படி தண்ணீர் எடுத்து செல்வது என்பதை ஆய்வு  செய்த மாவட்ட நிர்வாகம், அதே கிராமத்தில் சகோதரர்கள் இரண்டு பேர் கழுதைகளை பொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தி வந்ததை அறிந்தது. இதைத்தொடர்ந்து அந்த கழுதைகளை பயன்படுத்தி தற்போது தண்ணீர் கொண்டு  செல்லப்படுகிறது.

உரிமையாளருக்கு ₹2 லட்சம் பணம்
ஆதிவாசி கிராம மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தினமும் 17 கழுதைகள் இரண்டு முறை தண்ணீர் எடுத்து செல்கின்றன. இதற்காக கழுதை உரிமையாளர்களுக்கு ₹2 லட்சம் கொடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது. 3 கிமீ  தூரத்தில் இருந்து கழுதைகள் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டு செல்லப்பட்டு ஆதிவாசி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Tags : villages ,drought , Drought, affected, Water donkeys ,villages
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு