×

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கலாம்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்கவும், இதற்காக தொடக்க கல்வித்துறையின் கீழ் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை சமூக நலத்துறைக்கு மாற்ற தடைவிதிக்கவும் கோரி பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில்  தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவது மாநில அரசுகளின் கடமை. இதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 முதல் 5 வயது குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்காக அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களால் கல்வி அறிவு சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் சத்து குறைபாடு குறைந்துள்ளது.

தமிழகத்தில் 54 ஆயிரத்து 49 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள  2,381 அங்கன்வாடி மையங்களில் 52 ஆயிரத்து 933 குழந்தைகளுக்காக எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இல்லாததும், ஆங்கில வழிக்கல்வி இல்லாததும், கல்வித்தரம் இல்லாததும் காரணமாக கருதப்படுகிறது.

 தனியார் பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதாக கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்குவதுதான். இதுதொடர்பாக அரசு ஏற்கனவே கொள்கை முடிவெடுத்துள்ளது. அரசு ஒரு கொள்கை முடிவெடுக்கும் போது அதில் தலையிட நீதிமன்றத்துக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரமே உள்ளது.

குழந்தைகளுக்கு மழலையர் கல்வி நிலையில் இலவசமாக தரமான கல்வி வழங்க புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பதில், ஏற்கனவே உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஏற்கனவே உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.445 கோடி வீணாகிறது. இதை தடுக்க அந்த ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ள நினைப்பது தவறல்ல.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படாது, பணிநிலை, பணிமூப்பில் மாற்றம் ஏற்படாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை. இதனால் ஏழைக்குழந்தைகளுக்கு மழலையர் கல்வி அளவில் இலவசமாக தரமான கல்வி வழங்கும் தமிழக அரசின் முடிவை பாராட்டியே ஆக வேண்டும்.

இல்லாவிட்டால் நீதிமன்றம் கடமையில் இருந்து தவறியதாகிவிடும். எனவே இந்த அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தமிழக அரசு ஜூன் 1 முதல் அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும். அதற்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Intermediate Teachers ,centers , Anganwadi Center, Elgji, UKG, Intermediate Teachers
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...