ஆந்திராவில் மீண்டும் பரிதாபம் காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி சாவு

திருமலை: ஆந்திராவில் காருக்குள் விளையாடியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கிழக்கு துறைமுக குடியிருப்பில் வசிக்கும் கடற்படை அதிகாரியின் வீட்டில் வேலை செய்பவர் வினோத்குமார்.  இவரது மனைவியும் அதே பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன்கள் பிரித்வி, பிரேம்குமார்.

நேற்று முன்தினம் வினோத்குமார் தனது மூத்த மகன் பிரேம்குமாரை(7) தான் வேலை செய்யும் கடற்படை அதிகாரியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அதிகாரியின் காரை வினோத்குமார் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பிரேம்குமார் காருக்குள் ஏறி அதில் இருந்த பொம்மையை எடுத்து வந்து வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.  காரை சுத்தம் செய்த பின்பு வினோத்குமார் சாவியை கடற்படை அதிகாரியிடம் கொடுக்க சென்றார்.

காரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பிரேம்குமார் மீண்டும் காருக்குள் ஏறி பொம்மைகளை வைத்து விளையாடினாராம். அப்போது காரின் கதவு தானாக மூடிக்கொண்டது. கதவை திறக்க முடியாமல் மூச்சு திணறியுள்ளான். சிறிது நேரத்திற்கு பிறகு காரிலேயே மயங்கி கிடந்தான். ஆனால் இதையறியாத வினோத்குமார், வேலை முடிந்து மதியம் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மகன் இல்லாததால் மீண்டும் கப்பற்படை அதிகாரியின் வீட்டிற்கு வந்து தேடிப்பார்த்தார்.

சந்தேகமடைந்து வினோத்குமார் காரில் எட்டிப்பார்த்தார். அப்போது  பிரேம்குமார் காரில் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரேம்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியின்போது காரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கதவு தானாக மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : death ,Andhra , In Andhra, again, awful, in the car, the boy is breathing, dead
× RELATED செல்போன் திருடிய சிறுவன் சிக்கினான்