இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம் பிரகாசமாகும் பூமித்தாயை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம்   பிரகாசமாக இருக்கும். பூமித்தாயை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம்  மற்றும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆகியவை சார்பில் சர்வதேச உயிரியல்  பன்முகத்தன்மை தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின்  கூடுதல் செயலாளர் ஏ.கே.ஜெயின் வரவேற்றார். சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தேசிய பல்லுயிர்  பெருக்க செயல் திட்டம், நிதி திட்டம் மற்றும் விருதுகள் பெறுவதற்கான  தகவல்கள் அடங்கிய கையேடு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

இயற்கையை பாதுகாப்பது  என்பது நமது மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒன்றாகும். அனைத்து  மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கையை பற்றி  போதிக்கின்றன. இந்திய பாரம்பரியம், பூமித்தாயை சிறப்பிப்பதில் தனித்துவம்  வாய்ந்ததாக உள்ளது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும், உயிரியல்  பன்முகத் தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளன.  

தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காடுகள் மற்றும் உயிரினங்கள்  அழிக்கப்படுவதுதான் தற்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது.  காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மாசு காரணமாக  மரங்கள் பெருமளவுக்கு அழிந்து விட்டன. புயல், வெள்ளம் போன்ற இயற்கை  பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதால் மரங்கள் பெருமளவு சேதமடைந்து,  பெரும்பாலானோரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகளவில்  சராசரியாக . சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில் இந்தியாவில் 21 சதவீத  அளவுக்கே உள்ளன. 2001 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்  இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள்  அழிக்கப்பட்டு விட்டதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும்,  அரிய வகை தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் புள்ளி  விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் 90  சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளில் இருந்து இல்லாமல்  போய் விட்டது. இதனால் கோடிக்கணக்கான மக்களின் உணவு  பாதுகாப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய உணவு வினியோக முறை  80 சதவீதம் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற  குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பழக்க வழக்கத்தில்  ஏற்பட்ட பன்முகத்தன்மை இழப்பு, நமது வாழ்க்கை நடைமுறையில் நேரடி தாக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது.

சிறு தானியங்கள்  மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் நமது நாட்டின் கிராமப்புறங்களில்  பெருமளவுக்கு பயன்படுத்தப்படுவதோடு ஊட்டச்சத்து மிகுந்தவையாகும். எனவே,  நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பது  மிகவும் அவசியமானதாகும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே  பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன்  சார்ந்தவையாக அமையவேண்டும். இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம்  பிரகாசமாக இருக்கும்.

பூமித்தாயை பாதுகாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது  என்று அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றி கூறினார். விழாவில்  தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலாளர் பூர்வஜா ராமச்சந்திரன்,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கலோலில்கர்  உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ட்ரீ ஆம்புலன்ஸ் தொடக்கம்:
விழாவில் `ட்ரீ ஆம்புலன்ஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் மரங்களுக்கு என்று  பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட முதல்கட்ட ஆம்புலன்ஸ் சேவையை வெங்கையா நாயுடு  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மரங்களை  பாதுகாப்பதற்கான முதல் உதவி அளித்தல், மரம் நடுதல், மரங்களை இடம் மாற்றி  நடுதல், விதைப்பந்துகள் மூலம் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற  பணிகளுக்கும், மரங்களை பாதுகாத்து, வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன்  அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்காக மரங்களுக்கான ஆம்புலன்சு  சேவை தொடங்கப்பட்டுள்ளதாக `ட்ரீ ஆம்புலன்ஸ்’ அமைப்பின் நிறுவனர் டாக்டர்  கே.அப்துல் கனி தெரிவித்தார்.

Tags : Venkaiah Naidu , The nature, the embrace, the future, the future, the brightness, vice president, vengaiya naidu, talk
× RELATED டெல்லியில் மூத்த வழக்கறிஞர்...