அனைத்து இடங்களும் நிரம்பியது உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி:  உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நீதிபதிகள் பணியிடங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தற்போது நிரப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் சேர்த்து மொத்தம் 27 நீதிபதிகள் தற்போது பணியில் உள்ளனர். மொத்த நீதிபதி பணியிடங்கள் 1 ஆகும். இதையடுத்து 4 இடங்கள் காலியாக உள்ளதாக கொலீஜியம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு தேர்வு செய்து அதனை நிரப்பும் விதமாக பரிந்துரை செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில், கடந்த சில ஆண்டுகளாக சுமார் 6 அல்லது 7 நீதிபதிகளின் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருந்து வருவதும், இதையடுத்து ஓரிரு நீதிபதிகளை நியமனம் செய்யப்படுவதுமாக இருந்து வந்தது. ஆனால் முழுமையாக இதுவரை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளின் பணியிடங்களும் நிரப்பப்படாமல் தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நான்கு நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பக்கோரி உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் தரப்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதில், “நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த், அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை கொலீஜியம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 4 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதில் நீதிபதி பி.ஆர்.காவி(மும்பை), சூர்யகாந்த் (இமாச்சல்), அனிருத்தா போஸ் (ஜார்கண்ட்) மற்றும் போபண்ணா(கவுகாத்தி) ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்கள்.

நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலீஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அதனை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலீஜியத்துக்கே அனுப்பி வைத்தது. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலீஜியம் பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து தற்போது தேர்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட 4 நீதிபதிகளும் வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி இல்லை:   4 புதிய நீதிபதிகளை தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 1 நீதிபதி பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த வரலாற்று நிகழ்வாக தற்போது கருதப்படுகிறது. இதையடுத்து கோடை விடுமுறைக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் முழுமையாக செயல்படும்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பல முக்கிய வழக்குகள் அனைத்தும் விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நீதிபதி போபண்ணாவை பொருத்தமட்டில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்து அனுப்பியிருந்த போதும் மத்திய அரசு தரப்பில் அவர் இருமுறை நிராகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : judges ,Supreme Court , All places, full, Supreme Court, 4 new judges, appointment
× RELATED உயிருடன் இருப்பவருக்கு பேனர் வைக்க...