குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூட்டம்: 28ம் தேதி ஆணையம் கூடுகிறது

புதுடெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 4வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தாண்டு ஜூன் 12ம் தேதி தொடங்கும் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் திறந்து விடப்படுமா என்பது இக்கூட்டத்தின் முடிவில் தெரியும்.  தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி கடந்தாண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. மேலும்,  இந்த ஆணையத்துக்கு 4 மாநிலங்களின் பிரதிநிதிகளையும் நியமித்தது. இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு என 2 அமைப்புகள் அமைக்கப்பட்டு, தனித்தனியாக 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில், ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேனும், ஒழுங்காற்று குழுவின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நவீன் குமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் காவிரி ஆணையம் கூட்டம் இரு முறையும், ஒழுங்காற்று குழுவின் கூட்டம் மூன்று முறையும் டெல்லியில் நடந்துள்ளது.

காவிரி ஆணையத்தின் கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் ம் தேதியும், ஒழுங்காற்று குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதியும் இறுதியாக நடைபெற்றது. இந்த அமைப்புகளின் இந்தாண்டு கூட்டம் இதுவரை ஒருமுறை கூட நடத்தப்படாமல் உள்ளது.  இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், நான்கு மாநிலங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.  இதில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வரும் 28ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும்  மசூத் உசேன் தலைமையில் நடத்தப்படுகிறது.

Related Stories: