இரட்டை இலை லஞ்ச விவகாரம் டிடிவி.தினகரன் மீதான வழக்கு 31க்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டிடிவி.தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கை மே 1ம் தேதி விசாரிப்பதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், குமார் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், இவர்கள் மீது  குற்றச்சாட்டு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இவர்களுக்கு குற்றச்சாட்டு பதிவு நகல் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார். அதில் அவர், ‘சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், விசாரணைக்கான எந்தவித முகாந்திரமும் கிடையாது.

அதனால், பாட்டியாலா நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, வரும் 31ம் தேதி வழக்கை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு