22 ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணித்த சந்தேக கணவனுக்கு கிரிக்கெட் மட்டை அடி: கபாலத்தை பிளந்த மனைவி மீது புகார்

பெங்களூரு: மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வீடு முழுவதும் 22 ரகசிய  கேமராக்கள் பொருத்தி கண்காணித்த கணவனின் செயலால் ஆத்திரம் அடைந்த மனைவி அவரது தலையை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதையொட்டி மனைவி மீது  போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. ‘சந்தேக கோடு சந்தோஷ கேடு’  என்று சொல்வார்கள். அதாவது கணவன் - மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர்  நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அது   குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தி வாழ்க்கையை நரகமாக்கி விடும். இதற்கு உதாரணமாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம்:

Advertising
Advertising

பெங்களூரு  ஜெயநகரை சேர்ந்தவர் திவாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆடுகோடியில்  பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி  வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும் வயது  வித்தியாசம் 11 ஆண்டுகள். அதாவது திவ்யாவை விட திவாகர்  11 வயது மூத்தவர். திவாகர்-திவ்யா  திருமண வாழ்க்கையே வித்தியாசமாக தொடங்கியது. மேலும், திவ்யாவை திவாகர் தேர்வு செய்ததிலேயே பெரிய கதையும் உள்ளது. அவர் பெண் பார்க்க சென்றது அவரது மூத்த சகோதரியை. ஆனால், தங்கையான திவ்யாவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்துள்ளார்.

தென்றல்போல சென்று கொண்டு இருந்த திவ்யாவின்  குடும்ப வாழ்க்கையில் சந்தேகம் என்ற புயல் வீச தொடங்கியது. அழகாக இருக்கும்  திவ்யாவின் நடத்தையில் திவாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாருடனாவது  அவருக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதை எப்படி  உறுதிப்படுத்துவது என்று யோசித்த அவர் வீட்டில் சமையலறை உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் மொத்தம் 22 ரகசிய கண்காணிப்பு கேமராக்களை வாங்கி வந்து  பொருத்தினார். அவற்றில் பதிவாகும் காட்சிகளை தான் பார்ப்பதற்கு வசதியாக  தனது செல்போனுக்கு தனியாக செயலி (ஆப்) மூலம் இணைப்பு கொடுத்திருந்தார்.

மேலும்  விடுமுறை எடுத்துக் கொண்டு மனைவிக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்தார்.  மனைவி செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரும் ரகசியமாக சென்றார். தான் வீட்டில்  இல்லாத நேரத்தில் திவ்யாவின் நடவடிக்கையை கண்காணிக்க உறவினர் ஒருவரையும்  திவாகர் நியமித்தார். என்றாலும் அவரால் தனது சந்தேகத்தை நிரூபிக்க  முடியவில்லை. இதனால் கணவன் - மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

செல்போன் வாங்கிக் கொடுத்து அதிலும் ஸ்பைவேர் சாப்ட்வேரை போட்டு வேவு பார்த்ததால், திவ்யாவிற்கு கணவன் மீது அளவுக்கதிகமாக கோபம் மூண்டது. ஆத்திரம் அடைந்த  அவர் மகனிடம் இருந்த கிரிக்கெட் மட்டையை வாங்கி திவாகரின் தலை, முகம்  உள்ளிட்ட இடங்களில் தாக்கினார். இதில் திவாகரின் மண்டை உடைந்து  ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு தலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக திவ்யா மீது போலீசில் திவாகர் புகார்  கொடுத்தார். புகாரை ஏற்ற போலீசார், கணவன் - மனைவி இருவரிடமும் உள்ள கருத்து  வேறுபாடுகளை களைய கவுன்சிலிங் செய்வதற்கு அனுப்பி வைத்தனர். இருவரையும்  சமாதானப்படுத்தி ஒன்று சேர்க்கும் முயற்சி கடந்த சில வாரங்களாக  நடைபெற்றபோதிலும் அது வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிவதிலேயே குறியாக  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: