அருணாச்சலில் எம்எல்ஏ கொலை எதிரொலி தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தீவிர நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் எம்எல்ஏ உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் கடும் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ திரங் அபோ (41). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் அசாம் மாநிலத்தின் திப்ருகார் நகரில் இருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கோன்சா நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தீவிரவாத கும்பல் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், திரங் அபோ, அவரது மகன் உட்பட 10 பேர் பலியாகினர். இத்தாக்குதலுக்கு, நாகா தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவரான மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: அருணாச்சலத்தின் கிழக்கு பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படை கடும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.
இத்தகைய கிளர்ச்சி நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களே சிலர் ஈடுபடுகிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு சிலர் ஆதரவாகவும் இருக்கிறார்கள். பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்தால் அவர்களையே சிலர் கேள்வி கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போதைய தாக்குதலுக்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அனைவரும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக நின்றால்தான், எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பாதுகாப்பு படையால் மட்டும் நிரந்தர தீர்வு கொடுத்து விட முடியாது. இதில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : activists ,Arunachal , Arunachal MLA, Echo of killing, terrorist, military, action
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து...