ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு நர்ஸ் உள்பட 7 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: நாமக்கல் நீதிமன்றம் அதிரடி

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான நர்ஸ் அமுதவள்ளி உள்ளிட்ட  7 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்டவிரோதமாக நடைபெற்ற பச்சிளங்குழந்தைகள் விற்பனை  வழக்கில் ராசிபுரத்தை சேர்ந்த நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ல் டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் பர்வீன், நிஷா, லீலா, அருள்மணி, செல்வி, நர்ஸ் சாந்தி, பெங்களூருவை சேர்ந்த ரேகா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்,  கடந்த 16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், சகோதரர் நந்தகுமார் மற்றும் புரோக்கர்கள் லீலா, ரேகா, சாந்தி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் ஆகிய 7பேர், ஜாமீன் கேட்டு நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 7 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: