எதிர்க்கட்சியினரை சமாளித்துகூட அரசியல் செய்யலாம் சொந்த கட்சியினரின் துரோகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை: எம்எல்ஏ தோப்புவெங்கடாச்சலம் வேதனை

பெருந்துறை: எதிர்க்கட்சியினரைகூட சமாளித்து அரசியல் செய்யலாம். ஆனால், சொந்த கட்சியினர் செய்த துரோகத்தை சமாளிக்க முடியவில்லை என பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் வேதனை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை ரகசிய கூட்டம் நடந்தினார். இதில், பதவி விலகியது குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார். சொந்த கட்சியில் உள்ளவர்கள் தனக்கு செய்த இடையூறு குறித்து வேதனை தெரிவித்தார்.

இதன்பின், நிருபர்களிடம் வெங்கடாச்சலம் கூறியதாவது:

சொந்த கட்சியில் உள்ளவர்களே துரோகம் செய்வதை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக முதல்வரிடம் கடிதம் அளித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய மத்திய அரசு முடிவெடுத்து இடம் தேர்வு செய்தபோது பெருந்துறைதான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், அதன்பின் மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் பதவியில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் பெருந்துறையில் எய்ம்ஸ் அமைவதற்காக போராடியும் கிடைக்காமல் போனது வேதனையாக உள்ளது.

தற்போது, ரூ.252 கோடி செலவில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தபோதும் வருவாய் கோட்டாட்சியர் இத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தபோது கட்சியில் உள்ள முக்கியமானவர்களே தடை போட்டனர். அதேபோல், திருப்பூர் மக்களவை தேர்தலில்  அதிமுகவை சார்ந்த காலனி மக்கள் ஆயிரக்கணக்கானோருக்கு பவானியில் இருந்து வேட்டி சேலை வழங்கப்பட்டது.

ஆனால், அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கும், அமமுக வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டனர். அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளே இதை செய்துள்ளனர். அதேபோல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசு ஊழியரான மாற்றுக் கட்சி பிரமுகர் ஒருவரை ஆதாரத்தோடு பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால், அவரையும் விடுவிக்க ஆளுங்கட்சி புள்ளிகளே பரிந்துரை செய்து அவரை விட்டுவிட்டனர்.

எதிர்க்கட்சியினரை சமாளித்துகூட அரசியல் செய்யலாம் சொந்த கட்சியினரை சமாளிக்க முடியவில்லை. அதனால், பலமுறை முதல்வருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கட்சி பதவியில் இருந்து விலக முடிவெடுத்தேன். நான் மாற்று கட்சிக்கோ, மாற்று இயக்கத்துக்கோ போவதாக கூறுவது தவறானது. இவ்வாறு அவர்  கூறினார். இக்கூட்டத்தில், பெருந்துறை ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய அவைத் தலைவர் நல்லசிவம் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: