விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேர்தல் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட கல்குளம் தாசில்தார், உதவி தேர்தல் அதிகாரி, தேர்தல் பிரிவு எழுத்தர், பறக்கும்படை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விசாரித்து, 12 வாரங்களில் அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்கவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணிமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்குளம் பகுதியில் பொறுப்பு வகித்த, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரம் நபர்களின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்காளர்களுக்கான பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படவில்லை.

 இது ஒருபுறம் இருக்க, தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக சென்ற வாகனங்களுக்கு டீசல் போட்ட வகையில் போலி பில்களை அதிகமாக இணைத்துள்ளனர். வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நாட்களை விட அதிக நாட்கள் பயன்படுத்தியதை வாடகை கணக்கு காட்டப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மேஜை, நாற்காலி வாங்கியது, ஜெனரேட்டர் பயன்பாடு, சக்கர நாற்காலி வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன தணிக்கையில் பிடிபட்ட பணம், பொருட்களை பறிமுதல் செய்தவரிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட கல்குளம் தாசில்தார், உதவி தேர்தல் அதிகாரி, தேர்தல் பிரிவு எழுத்தர், பறக்கும்படை அதிகாரி ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விசாரித்து 12 வாரங்களில் அதுதொடர்பான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்கவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: