அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்: அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக சென்னை செல்வதற்காக ரேணிகுண்டாவிலிருந்து சரக்கு ரயில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வந்தது. அப்போது, எதிர்பாராத நிலையில் அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.  இதனால் சரக்கு ரயில் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில் நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்கள் வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், திருத்தணியில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதேபோல் திருத்தணியில் இருந்து காலை 6.30க்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் காலதாமதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டு அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்வதற்கு மின்சார ரயில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதம் செய்தனர்.  அதற்கு அதிகாரிகள், சிக்னல் சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றனர். இதையடுத்து 40 நிமிட காலதாமதத்திற்கு பிறகு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டது.

× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிக்க முன்பதிவு துவங்கியது