×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: ஜூன் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு

மன்னார்குடி: மன்னார்குடி அருகே  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 9-வது நாளாக விவசாயிகள் தங்களின் வாயில் கருப்பு துணி கட்டி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் ஆய்வுகள் நடத்தவும், ஹைட்ரோ கார்பன் எடுக்கவும் வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்து நிலத்தடி நீர் மட்டம் அதாலபாதாளத்திற்கு சென்றுவிடும். இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் 5 ஒன்றியங்களிலும் விவசாயிகள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 9ம் நாளாக நேற்று காலை மன்னார்குடி அருகே சேரன்குளம்  ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் வாயில் கருப்பு துணி கட்டி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு மக்கள், விவசாயிகள் விரோத போக்கை கைவிட வேண்டும். மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோஷமிட்டனர். விஷ பாட்டிலுடன் போராட்டம்: நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கி.மீ. தூரத்துக்கு கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை முக்குறும்பூர் தென்பாதி என்ற இடத்தின் வழியாக குழாய் பதிப்பதற்கு வேலை நடைபெற்று வருகிறது அப்பகுதியில் உள்ள 40 ஏக்கரில் பருத்தி, குறுவை சாகுபடி செய்த நிலத்தின் நடுவே குழாய் பதிக்கும் முயற்சி நடந்தது. இதையறிந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கையில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்துக்கொண்டு பருத்தி வயலில் இறங்கினர். அப்போது, எங்களது நிலத்தில் குழாய் பதித்தால் பூச்சிமருந்தை குடித்துத் தற்கொலை செய்துகொள்வோம் என்று கோஷமிட்டனர். இதை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.

தஞ்சை அருகே வல்லம், அய்யாசாமிபட்டி வழியாக திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை வரை 15 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு அதற்கான குழாய்கள் அய்யாசாமிபட்டியில் உள்ள தனியார் இடத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த விவசாயிகள் திரண்டு, குழாய்களை இறக்க வந்த லாரிகளை மறித்து திருப்பி அனுப்பினர். இதன்பின், அங்கிருந்து கலைந்து சென்றனர். 600 கி.மீ. மனித சங்கிலி: தஞ்சையில்  பேரழிப்புக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் நிருபர்களிடம் கூறும்போது, `ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசு அதை கைவிட  வலியுறுத்தியும் ஜூன் 12ம் தேதி மாலை மனித சங்கிலி  போராட்டம் நடக்கிறது. இதற்கு பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் ஏற்பாடு  செய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி புதுச்சேரி,  கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்  வழியாக ராமேஸ்வரம் வரை இந்த மனித சங்கிலி நடைபெறும். இதன் மொத்த நீளம்  600 கிலோ மீட்டராகும். கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கலி  நடைபெறும். இதில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இதற்கு அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு  தெரிவித்துள்ளன. திமுக, காங்கிரஸ், அமமுக, மதிமுக, நாம் தமிழர்,  கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். நீதிமன்ற வளாகத்தில் 2 பேர் கைது:  விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த இரணியன், விஷ்ணுபிரசாத், தென்னரசு, ராமசாமி, செல்வராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களில் ஒருங்கிணைப்பாளர் இரணியனை கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் பாலன்(43), நாகை மாவட்ட மையக்குழு விஷ்ணு(35) ஆகியோர் நாகை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்ஜாமீன் பெறுவதற்காக நேற்று காலை சென்றனர். ஆனால் முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இதன்பின், 2 பேரையும் செம்பனார்கோவில் போலீசார்  கைது செய்தனர்.

புதுச்சேரியிலும் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிலக்கரிக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிலத்தடியின் மேல்மட்டத்திலேயே  நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு படிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த  இடத்தில்தான் தற்போது ஹெல்கேஸ் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. அதன்படி பாகூர், பின்னாச்சிக்குப்பம்,  முள்ளோடை உள்ளிட்ட பல இடங்களில் போடப்பட்டுள்ள சோதனை ஆழ்குழாய் கிணறுகளில் மீண்டும் சோதனை  நடத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் புதுச்சேரியை பாலைவனமாக்கக்கூடிய திட்டம் என்பதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து,  கரிக்கலாம்பாக்கம் பகுதியில் வயல்வெளிகளில்  இறங்கி போராட்டம் நடத்தினர். கையில் கருப்புக்கொடியுடன் ஒரு மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : field ,Announcement , Hydrocarbon, farmers, demonstration, human chain struggle,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது