வாக்கு மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் எதிரொலி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர் மதுரை வருகை

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் எதிரொலியாக, ஐகோர்ட் உத்தரவின்  பேரில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஐஏஎஸ் அதிகாரி வேணுகோபால் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மூன்று தளத்தில் 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவம் உள்பட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதி பாதுகாப்பை மீறி பெண் தாசில்தார் உள்ளிட்ட 4 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து மதுரை மேற்கு தொகுதியில் உள்ள ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் ஒரு பார்வையாளர் நியமித்து அவர் முன்னிலையில் மதுரை தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்பேரில்   மதுரை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட சிறப்பு பார்வையாளராக கேரளாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வேணுகோபாலை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அவர் நேற்று மாலை மதுரை வந்தார். வாக்கு எண்ணிக்கை குறித்து, ஏற்கனவே உள்ள பொது பார்வையாளர் வினோத்குமார், கலெக்டர் நாகராஜன் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: