தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்கள் சொத்து விவரங்களை முறையாக பதிவேட்டில் பராமரிப்பதில்லை: முதன்மை இயக்குனருக்கு பொறியாளர் சங்கம் கடிதம்

சென்னை:தமிழக நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், கோட்டப்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பொறியாளர்கள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, தனியாக பதிவேடு வைத்து பொறியாளர்களின் சொத்துக்கணக்கு விவரங்களை பராமரிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில் சொத்து கணக்கு விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது அந்த சொத்து விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. இதனால், பொறியாளர்கள் சொத்து விவரங்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் முதன்மை இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ஒவ்வொரு 5 ஆண்டு முடிந்த பின்பும் சொத்து அறிக்கை படிவம் பணிபுரியும் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அப்படி பெறப்படும் அறிக்கையில் உள்ள விவரங்களை முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்திடத் துறை முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மேலும், பெரும்பாலான அலுவலகங்களில் இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை எனத்தெரிய வருகிறது.பதிவேட்டினை பணியாளர்கள் பணிபுரியும் அந்தெந்த அலகு தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பராமரித்திடவும், பணியாளர்கள் அடுத்த அலகிற்கு பணியிட மாறுதலில் செல்லும்போது சொத்து விவரங்களை அந்த அலகின் தலைமை பொறியாளருக்கு தெரிவித்திடவும் உரிய வழிமுறைகளை வகுத்து அனைத்து அலகுகளின் தலைமை பொறியாளர்களுக்கு தெரிவித்திடவும், தேவைப்படின் விதிக்கு தகுந்த திருத்ததினை அரசிடம் பெற்றிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் திடீரென வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருந்தால், அந்த பதிவேட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், உடனடியாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

× RELATED நீர் திறப்பதை கண்காணிக்க...