மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு எதிரொலி தமிழகத்தில் முக்கிய மருத்துவமனைகளில் தேவையான வசதி செய்யப்பட்டுள்ளதா?

சென்னை: ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து முதன்மை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வு அறிக்கையை மே 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் கடந்த 7ம் தேதி கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த நேரத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனாலும், அதுவும் திடீரென பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு, தலை காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளுக்கு மின்சாரம் இல்லாததால் ஆக்சிஜன் கிடைக்காமல் 5 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாகத்தான் வென்டிலேட்டர் வேலை செய்யவில்லை என்று பொதுப்பணித்துறை தெரிவித்தது. இதன் மூலம் வென்டிலேட்டர் வேலை செய்யாமல் 5 பேர் உயிரிழந்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளை ஆய்வு செய்யவும், அவை முறையாக இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் அவசரகால சிகிச்சை பிரிவுகளில் கூடுதலாக ஜெனரேட்டர்கள் தேவைப்படுகிறதா, ஜெனரேட்டர் பழுது என்றால் சரி செய்ய தகுதியான மெக்கானிக்கல் இன்ஜினியர் உள்ளனரா, யூபிஎஸ் சரியாக வேலை செய்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய  தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ரபீந்தர் மதுரை ராஜாஜி மருத்துவமனை, திருவாரூர் மருத்துவமனை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்தும், என்ன மாதிரியான வசதிகள் தேவை என்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ததை அடிப்படையாக வைத்து முதன்மை தலைமை பொறியாளர் அறிக்கை தயார் செய்து வருகிறார். இந்த ஆய்வு அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவசரகால சிகிச்சை பிரிவுகளில் கூடுதலாக ஜெனரேட்டர்கள் தேவைப்படுகிறதா, ஜெனரேட்டர் பழுது என்றால் சரி செய்ய தகுதியான மெக்கானிக்கல் இன்ஜினியர் உள்ளனரா, யூபிஎஸ் சரியாக வேலை செய்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

Related Stories: