ராகுல்தான் அடுத்த பிரதமர் என்ற எனது கருத்தில் எந்த மாற்றமுமில்லை: இப்தார் நோன்பு திறப்பில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்ற எனது கருத்தில் எந்த மாற்றமுமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில தேசிய லீக்கின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 

இந்த ஆண்டு இப்தார் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்போடு நடக்கிறது. நாம் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளோம். நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதுதான் நாளை நடக்கும். உறுதியாக மத்தியில் ராகுல் காந்தி நிச்சயமாக பிரதமராக பதவி ஏற்பார். என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஊடகங்களின் கருத்து கணிப்புக்கு திமுக என்றும் முக்கியத்துவம் அளித்தது இல்லை. ஊடக கருத்துக்கணிப்பு எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. அதாவது, காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அந்த கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கியை ஊடகம் வெளியிட்டுள்ளது. இதுவே பொய் என்பதற்கு சாட்சி. திமுக கொல்லைப்புறமாக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இதேபோன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அந்த தொகுதிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் சேர்த்து கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் யாரோ திட்டமிட்டு ஏவிவிட்டுள்ளனர். திமுகவை பொறுத்தவரை மக்கள் கணிப்புதான் உண்மையானது.  நாளைய முடிவுகள் மத்தியிலும், மாநிலத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு டெல்லி செல்ல வாய்ப்புள்ளது. ஜனநாயக முறைப்படி திமுக  ஆட்சிக்கு வரும். ஜெயலலிதா இல்லாத மைனாரிட்டி ஆட்சி எப்படி இத்தனை நாட்கள் நடைபெற்றது என்று மக்கள் ேகட்கும் கேள்விக்கு நாளை அதற்கான முடிவு தெரியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், திமுக மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், சேகர் பாபு, காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், திமுக பகுதி செயலாளர்கள் வா.பே.சுரேஷ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: