ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களான ரிசாட் - 2பி ரேடார் செயற்கைக்கோளை  பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் மூலம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை தயார் செய்து அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், பாதுகாப்பு பயன்பாட்டிற்காகவும், அனைத்து நிலைகளிலும் படத்தை மிகத்துல்லியமாக எடுக்கும் ரிசாட்-2பி என்ற நவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து அதை பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் மூலம் விண்ணில்  செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் முடிந்ததையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதும் 15 நிமிடம் 29 விநாடிகளில் 557 கி.மீட்டர் தொலைவில் 37 டிகிரியில் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து, அவர் பேசியதாவது:செயற்கைக்கோள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதற்கு, இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரையில் இஸ்ரோ சார்பில் 356 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 18 பூமி கண்காணிப்புக்காக அனுப்பியது. 47 செயற்கைக்கோள்கள் இந்தியாவிற்கு சொந்தமானதாகும். மற்ற செயற்கைக்கோள்கள் மாணவர்களும், அயல்நாடுகளும் வடிவமைத்தவை. மேலும், ரிசாட் -2பி செயற்கைக்கோளில் பயன்படுத்தும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் இரவு, பகல் என எந்த வானிலை சூழலிலும்  2.6 மீட்டர் விட்டம் அளவிற்கு துல்லியமாக படம் எடுக்க முடியும். இதையடுத்து, வரும் ஜூலை மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் சந்திராயன் - 2 விண்ணில் செலுத்தப்படும்.  இதற்கான இறுதி கட்ட சோதனைகள் துரிதமாக நடந்து வருகிறது. பி.எஸ்.எல்.வி - சி47 மூலம் கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுதவிர சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் அடுத்து ஏவப்பட உள்ள 10 ராக்கெட்டுகளின் திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.  விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு சிவன் பேசினார்.

ரிசாட்-2பி செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டிற்கு உதவியாக உளவு பணிகளை இச்செயற்கைகோள் மேற்கொள்ளும். இந்தியாவின் எல்லைப்பகுதிகளை செயற்கைக்கோள் மிகத்துல்லியமாக கண்காணிக்கும் வல்லமை படைத்தது. இதேபோல், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்டவகைகளுக்கும் பயன்படுத்தப்படும். இதில் உள்ள எக்ஸ்பேண்ட் ரேடார் கருவிகள் மூலம் அனைத்து நிலைகளிலும் அதிக திறன்கொண்ட படங்களை மிகத்துல்லியமாக எடுக்க முடியும். இதனால் நம்நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும். பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டானது இந்த ஆண்டில் விண்ணில் ஏவப்படும் 3வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: