×

டாஸ்மாக் மீது காட்டும் ஆர்வம் கல்வி மீது இல்லை: 3,600 அரசுப்பள்ளிகளை மூட திட்டம்.. எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தமிழகத்தில் 3,600 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.)  மாநில தலைவர் ஏ.டி. கண்ணன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கல்விக்கு ஆண்டுதோறும் ₹28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன. பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தில் அரசுக்கு அக்கறை இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தமிழக அரசு பள்ளிகளில் இல்லை. பல்வேறு அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகள்கூட இல்லாமல் உள்ளன.

இதனால் அரசு பள்ளிகளை வெறுத்து, மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால் கேரளாவில் தனியார் பள்ளிகளில் இருந்து மக்கள் அரசு பள்ளிகளை நாடி வருகிறார்கள். மத்திய அரசு நாடு முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 3,600க்கும் அதிகமான அரசு பள்ளிகள் மூடப்பட உள்ளன. தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைககளில் இறங்கி உள்ளது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டால் ஏழை, நடுத்தர மாணவர்களின் தொடக்க கல்வியே கேள்விக்குறியாகி விடும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என கட்டாய கல்வி சட்டம் கூறுகிறது. ஆனால் இருக்கும் பள்ளிகளை அரசு மூடி வருகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளின் கல்வி விரோத போக்குகளை கண்டித்தும், கல்வியை பாதுகாக்க ேகட்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்தும் சைக்கிள் பிரசார பயணம் தொடங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என கட்டாய கல்வி சட்டம் கூறுகிறது. ஆனால் இருக்கும் பள்ளிகளை தமிழக அரசு மூடி வருகிறது.

Tags : state schools , Taskmachu, Education, Public School, Close Project
× RELATED காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள 7...