திருச்சி அருகே கொடூரம்: 5 வயது சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற தாய், கள்ளக்காதலன் கைது

தொட்டியம்: திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரசன்னபாபு(42), தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யகமலா(32), எம்.எஸ்.சி படித்துள்ளார். இவர்களது குழந்தை லத்திகாஸ்ரீ(5). ரசன்னபாபுவிற்கும், நித்யகமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். சிறுமி லத்திகாஸ்ரீ தாயுடன் வசித்து வந்தார். கணவனை பிரிந்து வாழ்ந்த நித்யகமலாவிற்கும் திண்டுக்கல்லை சேர்ந்தவரும் மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்த முத்துபாண்டி(41) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பல்வேறு ஊர்களில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

ஆனால், முத்துப்பாண்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் 2 பிள்ளைகளும் மதுரையில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரில் வாடகைக்கு வீடு பிடித்து முத்துப்பாண்டி நித்யகமலாவையும், லத்திகாஸ்ரீயைும் குடி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நித்யகமலா தனது மகள் லத்திகாஸ்ரீயை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். சிறுமி லத்திகாஸ்ரீயின் உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன. அங்கு முதலுதவி அளித்த டாக்டர், லத்திகாஸ்ரீ உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். வழியில் லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து போனார்.

தகவலறிந்து சேலம் சென்ற காட்டுப்புத்தூர் போலீசார் விசாரித்ததில் லத்திகாஸ்ரீயை தாய் நித்யகமலா அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. சேலம் மருத்துவமனைக்கு சிறுமியுடன் சிகிச்சைக்கு சென்ற முத்துப்பாண்டி போலீசாரை கண்டதும் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சேலம் டவுன் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை கைது செய்தனர். போலீசாரின் பிடியில் அகப்பட்ட முத்துப்பாண்டி, நித்யகமலா குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தியாக கூறினார். ஆனால் நித்யகமலா முத்துபாண்டிதான் குழந்தையை கொடூரமாக தாக்கியதாக கூறினார். பின்னர் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சிறுமியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதில் சிறுமி உயிரிழந்தாள் எனவும் போலீசாரிடம் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னபாபுவை திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்த போலீசார், அவரிடம் இருந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். அந்த மனுவில், ‘முத்துப்பாண்டியும், நித்யகமலாவும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருப்பதாக கருதி எனது குழந்தை லத்திகாஸ்ரீயை அடித்து கொடுமைப்படுத்தி கொன்றுள்ளனர். எனவே இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதைத் தொடரந்து இருவரும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் பயிற்சி முகாம்

கள்ளக்காதலியுடன் காட்டுப்புத்தூரில் முகாமிட்ட முத்துப்பாண்டி தனது மனைவியிடம், காரைக்காலில் எனக்கு 40 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. அதற்கு போகிறேன். 40 நாள் கழித்து தான் வீட்டுக்கு வருவேன். அடிக்கடி போனில் பேசுகிறேன் எனக்கூறி துணிமணிகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

நித்யகமலா வாழ்க்கையை சீரழித்த முத்துப்பாண்டி

நித்யகமலாவின் தந்தை திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்தார்.அதே பள்ளியில் அப்போது முத்துப்பாண்டி உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கத்தால் முத்துப்பாண்டி அடிக்கடி நித்யகமலா வீட்டிற்கு வந்து போனார். அப்போது இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரசன்னபாபுவுக்கு தெரிந்ததால் அவர் மனைவியை பிரிந்தார். சட்டப்படி பிரிவதற்கு விவாகரத்தும் கேட்டுள்ளார்.

Related Stories: