×

இவிஎம் கோளாறு கூறும் எதிர்க்கட்சிகள் வெற்றியை விட்டு கொடுப்பார்களா?: மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு கூறும் எதிர்க்கட்சிகள், தாங்கள் வெற்றிப் பெற்றால் அவர்களது வெற்றியை விட்டுக்  கொடுப்பார்களா? என்று, மத்திய சட்ட  அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை  வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதற்கிடையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு  இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் 22 எதிர்கட்சிகள் கூட்டாக நேற்று புகார் அளித்துள்ளன. இந்நிலையில் எதிர்கட்சிகளின்  குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி ஆட்சியின்  வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். தேர்தல் முடிவில் யார் தோற்றாலும் தோல்வியை கனிவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல்  வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறக் கூடாது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறும் எதிர்க்கட்சிகள், மேற்குவங்க  முதல்வர் மம்தா  பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்திர சிங், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் வெற்றியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.   வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு பாஜ வெற்றி பெற்றது என்றால், இவர்களும் அவ்வாறே வெற்றி பெற்றனரா? மம்தா பானர்ஜி இருமுறை  வெற்றி பெற்று  முதல்வரான போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எழாத சந்தேகம், தற்போது அவருக்கு அதிகமாகி உள்ளது. இதற்கு காரணம்  தற்போது பாஜ வெற்றியை குறிவைத்து அவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட தேர்தலின் போது எதிர்கட்சிகள்  தங்களது தோல்வியை அறிய ஆரம்பித்து விட்டனர். இதனால், அன்றுமுதல் நாடகமாடி வெற்றி பெற விரும்புகின்றனர். ஒருவேளை  எதிர்க்கட்சியினர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால், வாக்குபதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தங்களது வெற்றியை  விட்டு கொடுப்பார்களா? இவ்வாறு அவர் கூறினார்.


Tags : opposition parties , EVM scam, opposition parties, voting machines, federal law minister Ravi Shankar Prasad
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு