காட்டுமன்னார்கோவில் அருகே செவிலியரின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில்  அடுத்த ஆயங்குடி உசேன் நகரை சேர்ந்தவர் முஹம்மது ரபீக் மனைவி சுமையாபானு  (20). இவருக்கு கடந்த 17ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆயங்குடி  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லை என  கூறப்படுகின்றது. இதனால் சுமையாவின் தாய் மற்றும் கணவர் வேறு  மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த  செவிலியர் புவனேஸ்வரி, அவரின் உதவியாளர், சுமையாவை பரிசோதனை செய்து பிரசவ  வலி ஏற்பட்டுள்ளது, உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டும் என கூறி முஹம்மது  ரபீக்கிடம் ஒப்புகை கோப்பில் கையெழுத்து வாங்கினார்.

அப்போது பிரசவ  தேதிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ளது என ரபீக் கூறியபோதும் அதனை கேட்காத செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதையடுத்து சுமையாவிற்கு  ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சுமையாவிற்கு தையல் போட்ட இடத்திலிருந்து  ரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது. இதுகுறித்து சுமையாவின் தாய்  செவிலியர்களிடம் கேட்டபோது உங்கள் மகளுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது  என கூறினார். பின்னர் இதுகுறித்து மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அதன்பேரில் மருத்துவர் ஷமீர் பிரசவ வார்டுக்கு சென்று பரிசோதனை செய்து மேல்  சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி  அறிவுறுத்தினார்.

அதன்படி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி  மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த  மருத்துவர்கள் சுமையாவிற்கு கர்ப்பப்பை, மலக்குடல், பெருங்குடல், ஆசனக்குழாய் ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி தீவிர சிகிச்சை  பிரிவில் சேர்த்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கால்கள் இரண்டும் மரத்துப்போனதாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப  சுகாதாரநிலையத்தின் அவலம் குறித்து ஆயங்குடி ஊர் மக்கள் மாவட்ட மருத்துவ  அலுவலருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: