கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவி வெள்ளிக்கிழமை வரை தான்: மாநில பாஜக தலைவர் பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா  கூறியுள்ளார். நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து  செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது.  இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெல்லும்  என தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காத்திருக்க பா.ஜனதா டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால்  எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கர்நாடக முதல்வர் குமாரசாமி, மூத்த அரசியல்வாதியான எடியூரப்பா, கடந்த சில நாட்களாக கீழ்தரமான  செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியை எடியூரப்பா மேற்கொண்டு வருவதாக கூறி,  ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த ஆடியோவில், சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரை 50 கோடி ரூபாய்க்கு விலை பேசியது பதிவாகி உள்ளதாக  கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது என்றும்,  அதனை ஆதாரத்துடன் நிரூபித்தால் தமது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறினார்.   காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில்  இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.

 இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக மாநில  பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா, மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜனதா முழு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வராக  இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது என்றார். கர்நாடகாவில்  காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி தோல்வி அடையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அவர்களின்  கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் எனக் கூறியுள்ளார்.

Related Stories: