64 மேஜைகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை: 45 நிமிடங்களுக்கு ஒருமுறை முன்னணி நிலவரம் தெரியவரும்

* கோணம் பாலிடெக்னிக்கில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில், கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டடத்தில் இன்று நடைபெறுகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 64 மேஜைகளில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் லெட்சுமணன் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அன்று மாலை முதல் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை மையமான நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 69.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 73.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று (23ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதனையொட்டி காலை 7 மணிக்குள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் கட்டுப்பாட்டு கருவிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதற்கு அடுத்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய பொருத்தப்பட்டிருந்த விவிபேட் கருவியில் பதிவான ரசீதுகள் எண்ணப்படுகிறது. சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து வீதம் விவி பேட்களில் பதிவாகி விழுந்த ரசீதுகள் எண்ணப்படும். இதற்கென்று பிரத்யேக வாக்கு எண்ணிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 5 வீதம் 30 விவிபேட்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இவை தவிர மாதிரி வாக்குபதிவு நடைபெற்றபோது பதிவான வாக்குகளை மின்னணு இயந்திரத்தில் கட்டுப்பாட்டு கருவிகளில் அழிக்காத மூன்று வாக்குசாவடிகளில் பொருத்தப்பட்டிருந்த விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 33 விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.

முதலில் தபால் வாக்கு, அதன் பின்னர் விவி பேட்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி முடித்து சரிபார்த்த பிறகே வெற்றி வேட்பாளர் பற்றிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெற்றி வேட்பாளர் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இரவு வரை ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 மேஜைகளும், இதர நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு தலா 10 மேஜைகளும் வாக்கு எண்ணிக்கைக்காக போடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சுற்றில் மொத்தம் 64 மின்னணு இயந்திரங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 28 சுற்றுகள் நிறைவில் மின்னணு வாக்குபதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, எஸ்.பி. நாத் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அங்கு வாக்கு எண்ணிக்கைக்காக  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அப்போது முகவர்கள் அமர வேண்டிய இடம், செல்கின்ற பாதை, பாதையில் செய்யப்பட்டுள்ள சோதனைக்கான ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு அறை, ஒலிப்பெருக்கி வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அதிக சுற்றுகள் கொண்ட 5 தொகுதிகளில் ஒன்று

தமிழகத்தில் அதிக சுற்றுகள் கொண்ட ஐந்து மக்களவை தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. மக்களவை தேர்தலில் வேலூர் தவிர மொத்தம் 38 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றுள்ளது. இதில் 33 தொகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியைவிட குறைவான சுற்றுக்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் வாக்கு எண்ணிக்கை, பிரச்னைகள் ஏதுமில்லையெனில் முன்கூட்டியே நிறைவு பெற வாய்ப்பு உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ள தொகுதிகள் ஆகும்.  கன்னியாகுமரி போன்று ராமநாதபுரம் தொகுதியில் 28 சுற்றுகள் எண்ணிக்கை நடைபெறும். திருவள்ளூர் (34), பெரும்புதூர் (32), காஞ்சிபுரம் (32), கோயம்புத்தூர் (30) அதிக சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதர தொகுதிகள் ஆகும்.

Related Stories: