மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக 5 மணிநேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: