வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: உள்துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞர் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில், அருள் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்போல், வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டியது. இதில் சம்பந்தப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகர் (எம்.எல்.ஏ.), போலி நிருபர், இன்னும் சிலர் மீது வழக்கறிஞர் அருள் என்பவர், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியிடம் ஏப்ரல் 21ம் தேதி புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசிய ஆடியோவை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் முன்னிலையில் அருள் வெளியிட்டார். பரபரப்பான இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வக்கீல் அருளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி கடந்த மாதம் 30ம்தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தார். அருளின் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த கலையரசி(25) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், போலி ஆடியோ மூலம் பெண்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக குண்டர் சட்டத்தின் கீழ் அருள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அருளின் மனைவி சென்னை உயநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், மேலும் உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்கவே அருள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிநதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, இது தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். மேலும் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: