தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது..: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை முடித்துவைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்!

புதுடெல்லி: தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் துப்பாக்கிச்சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertising
Advertising

இதனையடுத்து மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தியளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. துப்பாக்கிசூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இது சம்பந்தமான வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: