ஜாம்புவானோடை- தில்லைவிளாகம் இடையே போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் ஜாம்புவானோடை - அரமங்காடு - செங்காங்காடு - தில்லைவிளாகம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு பாலத்திலிருந்து கந்தப்பறிச்சான் ஆற்று ஓரமாக  ஜாம்புவானோடை - அரமங்காடு- செங்காங்காடு- தில்லைவிளாகம் ஆகிய பகுதிகளை இணைக்கும் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு பகுதி பிரிந்து ஜாம்புவானோடை கடைசியில் உள்ள தடுப்பணை மற்றும் இறால் பண்ணைகளுக்கும் செல்லும் வகையில் செல்கிறது.

பழமையான இந்த சாலையை சுற்றுபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தினந்தோறும் சுற்று பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இவ்வழியாக சென்று வருகின்றனர். அதேபோல் இந்த சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் தினந்தோறும் இப்பகுதி மீனவர்கள் இரவு பகலாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்த சாலை அமைத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் தற்போது சாலை முழுவதும் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.

பல இடங்களில் சாலை இருந்ததற்கான அடையாளமே தெரியாதளவில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும். இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் மினி பஸ், கார், சைக்கிள் பைக் போன்ற வாகனங்களும் செல்லமுடியவில்லை. அதேபோல் அவசர உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் இந்த சாலையை சீரமைக்க முன்வரவில்லை. இதனால் நாளுக்குநாள் சாலை படுமோசமாக மாறி வருவதுடன் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்களும் நடந்து வருவதுடன் நடந்து செல்லும் மக்களுக்கு காலில் காயங்களும் ஏற்பட்டு வருகிறது. அதனால் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செங்காங்காடு ரவிக்குமார் கூறுகையில்,  இந்த சாலை படுமோசமாக சுமார் ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது இதனால் அவசரத்துக்கு கூட இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. இந்த சாலையை முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் வேலைக்கு சென்று விட்டு களைப்பாக இந்த சாலை வழியாக செல்லும்போது மயங்கி விழுந்து பாதிக்கப்படுகிறார்கள்.

அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. மாவட்ட ஆட்சியர் இதனை நேரில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.


Tags : Thillai Kilam , Muthupettai , village roads, link roads, travel waste
× RELATED மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...