×

விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பகோணம்- நீலத்தநல்லூர் சாலை அகலப்படுத்தப்படுமா?

கும்பகோணம் : விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பகோணம்- நீலத்தநல்லூர் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூர்- மதனத்தூர் இடையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பாலம் கடந்த 5 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இது தஞ்சை- அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் பாலமாகும். கும்பகோணத்தில் இருந்து சென்னை  செல்பவர்கள் அணைக்கரை வழியாக சென்றால் 50 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர், மதனத்தூர், ஜெயங்கொண்டம் வழியாக சென்றால் 50 கிலோ மீட்டா் தூரம் குறையும். அதனால் சென்னை செல்லும் பேருந்துகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், லாரிகள், காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் நீலத்தநல்லூர் சாலையில் சென்று வந்தன. சமீபத்தில் அணைக்கரை பாலம் சேதமடைந்ததால் சென்னை செல்லும் அனைத்து கனரக முதல் இல ரக வாகனங்கள் நீலத்தநல்லூர் சாலை வழியாக சென்று வருவதால் கடிச்சம்பாடி, அசூர், தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் பகுதியில் உள்ள குறுகலான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் தினம்தோறும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பாலம் கட்டிய பிறகு, அப்பகுதி கிராம மக்கள், சாலையை  அகலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் அடுத்த அசூரிலிருந்து நீலத்தநல்லூர் வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுகலாக இருந்த சாலையை பெயரளவுக்கு அகலப்படுத்தி போடப்பட்டது.  ஆனால் சாலையோரங்களில் அதிகமான புளியமரங்கள் உள்ளது. இதனால் சாலையின் திருப்பங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் குறுகலாக உள்ளது. டிரைவர்கள் கொஞ்சம் அயர்ந்தால் பெரும் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

தற்போது கோடை காலமாக இருப்பதால் பல புளியமரங்கள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் சாலை குறுகலாக உள்ளதால் புளியமர கிளைகளின் மீது வாகனங்கள் உரசி செல்லும் நிலை உள்ளது. சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மேலும் அகலப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வருங்காலத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீலத்தநல்லூர் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kumbakonam-Nilanthanallur ,accident , accidents,Kumbakonam,nelathanallur ,road extension, traffic jams
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி