பட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் நகராட்சி பொது கழிவறை கட்டிடம்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டுக்கு மேலாக நகராட்சி பொது கழிவறை கட்டிடம் பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகி்ன்றனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய சாலையில் நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கழிப்பிடம் துவங்கிய காலத்திலிருந்து கட்டண கழிப்பிடமாக இருந்து பின்பு இலவச கழிப்பிடமாக மாற்றப்பட்டது.

இந்த கழிப்பிடத்தை ஆரம்பித்ததில் இருந்தே  பொதுமக்களும், குறிப்பாக சிறிய தனியார் வர்த்தக நிறுவனங்களில்  பணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் தினசரி பொதுமக்களும், சிறிய வர்த்தக நிறுவனங்களில்
பணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பிடம் பூட்டப்பட்டிருப்பதால் தினசரி கழிப்பிடத்தின் வெளியிலேயே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலமும் நடந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் ஒருவிதமான துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் மாசுபட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த கழிப்பிடத்தின் பின்புறம் தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் பலர் முகம் சுளிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓராண்டுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். குறிப்பாக நகராட்சி சார்பில் ஒரு தொழிலாளரை நியமித்து தினசரி பராமரித்து இலவச கழிப்படமாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணக்குமார் கூறுகையில், பெரியதெரு, பெரியகடைத்தெரு, பிள்ளையார்கோவில் தெரு, தலைமை தபால் நிலைய சாலை உள்ளடக்கிய 4 தெருக்களிலும் 500க்கும் மேற்பட்ட  வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் இப்பகுதியில் முறையான கழிப்பிட வசதி இல்லை. இந்நிலையில் தலைமை தபால் நிலைய சாலையில் நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடமும் பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இப்பகுதியில் பணிபுரியும் பெண்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். மேலும் திறந்தால் மட்டும் போதாது, முறையாக பராமரிக்க வேண்டும் என்றார்.

× RELATED றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின்...